Wednesday, January 18, 2012

வேட்டை - திரைப்பட விமர்சனம்

பொங்கல் பண்டிகையின் குதூகல மூடுக்கேற்ப வந்துள்ள படம் என்றால் லிங்குசாமியின் வேட்டைதான். இத்தனைக்கும் படத்தின் கதை ஒன்றும் புதிதில்லை. எம்ஜிஆர் கால பார்முலாதான். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதமும், யுவன் சங்கர் ராஜாவின் துள்ளல் இசையும் படத்தை உற்சாகமாக ரசிக்க வைக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் பாக்யராஜ் இயக்கம் நடிப்பில் 'அவசர போலீஸ் 100' என்று ஒரு படம் வந்தது (அமரர் எம்ஜிஆர் நடித்த காட்சிகளை சேர்த்து). கிட்டத்தட்ட அதே கதையை கொஞ்சம் ரிப்பேர் பண்ணி வேட்டையாக்கியிருக்கிறார் லிங்குசாமி.

மாதவனும் ஆர்யாவும் பாசமிக்க அண்ணன் தம்பிகள். இவர்களது அப்பா தூத்துக்குடியில் போலீஸ் அதிகாரி. மாதவன் இயல்பில் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால் ஆர்யாவோ அதிரடிப் பார்ட்டி. அண்ணனின் பயத்தைப் போக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார் ஆர்யா. அப்பா மறைவுக்குப் பிறகு அவரது காக்கி யூனிபார்மை அண்ணன் மாதவனுக்கு மாட்டிவிடுகிறார்!

வெறும் யூனிபார்ம்தான் மாதவனுக்கு... ஆனால் நிஜத்தில் அத்தனை சாகஸங்களையும் செய்பவர் ஆர்யா. வெளியில் தெரியாமல் நடக்கும் இந்த டூப்ளிகேட் சமாச்சாரம், மூன்று தூத்துக்குடி ரவுடிகளை களையெடுக்கும் முயற்சியில் அம்பலமாகிவிடுகிறது. மாதவனையும் ஆர்யாவையும் ஒழித்துக்கட்ட கைகோர்க்கிறார்கள் ரவுடிகள். இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் சகோதரர்கள் என்பது எளிதில் யூகிக்கக் கூடிய க்ளைமாக்ஸ்.

இடையில் பயந்தாங்கொள்ளி மாதவனுக்கு தடாலடி சமீராவை திருமணம் செய்து வைப்பதும், அப்படியே சமீராவின் அழகுத் தங்கை அமலாவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் பூப்பதும் செம ஜாலியாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஆர்யா அதிரடி பண்ணுகிறார். நடனம், சண்டை, காதல், நகைச்சுவை, அமெரிக்க மாப்பிள்ளையைக் கலாய்ப்பது என அத்தனை காட்சிகளிலும் வெளுத்துக் கட்டியுள்ளார். படத்துக்கே தனி வண்ணத்தை தருகிறது ஆர்யாவின் துடிப்பான நடிப்பு.

அண்ணனாக வரும் மாதவன் அடக்கி வாசித்து, மனதைக் கொள்ளையடிக்கிறார். அதிரடியாக அதகளம் பண்ணுவதை விட, ஒரு கோழையாக நடிப்பதில்தான் சவால் அதிகம். மாதவன் அந்த சவாலில் ஜெயித்திருக்கிறார். ரவுடிகளிடம் அடிபட்ட பிறகு, 'போதுண்டா... எவ்வளவு நாளைக்குதான் நீ வந்து காப்பாத்துவேன்னு காத்திட்டிருக்கிறது' என்று அவர் பேசும் காட்சியும், தம்பியை அடிப்பது பொறுக்காமல், தன்னையறியாமல் வீல்சேரிலிருந்து எழுந்து இரும்புக் கம்பி வலையை ஏறிக் குதிப்பது போன்ற காட்சிகளில் மாதவன் நடிப்பு 'க்ளாஸ்'!

கதைக்களம் தூத்துக்குடி என்பதற்காக அனாவசியமாக ஏலே வாலே போலே என்று பாத்திரங்களை செயற்கையாக பேசவிடாததற்காக இயக்குநருக்கு நன்றிகள் (நாசர் விலக்கு).

நாயகிகள் இருவருமே படத்துக்கு பெரும் பலம். சமீராவின் அதிரடியும் அமலா பாலின் கிறங்கடிக்கும் கவர்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்துதான். போலீஸ் கணவனைத் தேடி வீட்டுக்கு வரும் ரவுடியை வீராவேசமாக எதிர்க்கும் காட்சியில் சமீராவும், அமெரிக்க மாப்பிள்ளையை வெறுப்பேற்ற ஆர்யாவுக்கு லிப் டு லிப் அடிக்கும் காட்சியில் அமலாவும் அட்டகாசம்!

க்ளைமாக்ஸில் எந்த புதுமையும் இல்லாதது ஒரு குறை. ரவுடிகள் மாதவன் வீட்டை முற்றுகையிடும்போதே, முடிவு தெரிந்துவிடுகிறது. ஆர்யா அடுத்து என்ன ஆவார் என்று கூட பக்கத்து சீட்காரர் கணித்துச் சொன்னது, தமிழ் சினிமா இயக்குநர்களை மக்கள் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்று!

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பண்டிகைக்கால உற்சாகத்தைத் தருகிறது. தூத்துக்குடி பக்கத்தில் இப்படியெல்லாம் லொகேஷன்கள் இருக்கிறதா...!

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இன்னொரு ப்ளஸ். அந்த பப்பரப்பா பாட்டுக்கு தியேட்டரே ஆடுகிறது. பழைய கதையை பரபரப்பாக நகர்த்திச் செல்வதில் எடிட்டர் ஆண்டனியின் பங்கு பெரியது!

ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அது, படம் பார்ப்பவர்களை ஒரு கணம் கூட யோசிக்கவே விடக்கூடாது. ஜாலியாக பார்க்க வேண்டும் என்பதுதான். லாஜிக், எதார்த்தம் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பார்த்தால் இந்தப் படத்தை ரசிக்க முடியும்!

வேட்டை ... வசூல் வேட்டை!


0 comments:

Post a Comment