Monday, January 16, 2012

இந்த அணியால் அயல்நாடுகளில் வெல்ல முடியாது-கங்கூலி

இப்போதுள்ள இந்திய அணியால் அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கூலி தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் எந்த ஒரு அணியும் இவ்வளவு நீண்ட காலம் அயல்நாடுகளில் இவ்வளவு மோசமாக விளையாடியதில்லை. இரண்டாவது இன்னிங்சில் சரணாகதியடைந்ததை பார்க்க வேதனையாக இருந்தது. இது எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும் இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது இந்த அணி அயல்நாடுகளில் வெல்ல முடியாது.

இப்போதுள்ள வீரர்களுடன் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் இப்போதைய இவர்களது துரதிர்ஷ்டமான ஆட்டம் வேதனையளிக்கிறது. ஆனால் இதுதான் எதார்த்தம், இந்த இடத்தில்தான் இந்திய கிரிக்கெட் இப்போது உள்ளது.

இந்த அணி அனைத்து விமர்சனங்களுக்கும் தகுதி உடைய அணியே.

மூத்த வீரர்கள் சரியான நேரத்தில் அவர்களாகவே ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கூறி வருகிறேன்.

வெளிநாட்டில் நடைபெறவுள்ள அடுத்த டெஸ்ட் தொடரில் அவர்களுக்குப் பதிலாக மாற்றுவீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். திராவிட், லட்சுமண் இருவரும் இந்திய ஆடுகளங்களில் தொடர்ந்து ரன் குவிப்பார்கள். அடுத்த டெஸ்ட் தொடர் 2013-ல் தான் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு திராவிட், லட்சுமண் இருவரும் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும்.

பெர்த் டெஸ்டில் இந்தியாவின் தோல்வியைத் தவிர்க்க முடியாது. அடிலெய்டில் நடைபெறவுள்ள 4-வது டெஸ்டிலும் இந்தியா தோல்வியடையலாம். இந்த டெஸ்ட் தொடருக்குப் பின் இந்திய அணியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். அவ்வாறு செய்தால்தான் இந்திய கிரிக்கெட் நன்றாக இருக்கும்.

அடுத்த 3 இன்னிங்ஸ்களில் தோனி சிறப்பாக ஆடி தன்னை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் ஆடும் லெவனில் அவர் விளையாடுவது சந்தேகமாகிவிடும் என்றார்.


0 comments:

Post a Comment