Saturday, January 14, 2012

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது... அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.

வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும். வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன் படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment