Thursday, January 12, 2012

இனி 5 பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள்!

சிறு முதலீட்டுப் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கச் செய்யும் வகையில், இனி ஆண்டில் 5 பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

பெரிய படங்கள் திரையரங்குகளைப் பிடித்துக் கொள்வதால், சின்ன படங்கள் வெளியாக முடியாத நிலை உள்ளதாக தொடர்ந்து புலம்பி வருகின்றனர்.

பண்டிகை நாட்களிலும் மற்ற தினங்களிலும் பெரிய நடிகர்களின் படங்களையே திரையரங்க உரிமையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

ஒரே படம் நிறைய தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. அது தூக்கப்பட்டதும் இன்னொரு பெரிய படம் வந்துவிடுவதால், சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாக முடிவதில்லை. இந்த நிலையை மாற்ற தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இனி ஆண்டில் 5 முக்கிய பண்டிகைகளில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகையில், "சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையை போக்க பெரிய நடிகர்கள் படங்களை ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்டு 15 சுதந்திர தினம், தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய 5 பண்டிகை தினங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்.

இதன் மூலம் சிறு பட்ஜெட் படங்களுக்கு மற்ற நாட்களில் தாராளமாக தியேட்டர்கள் கிடைக்கும்," என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் இதுபோல கட்டுப்பாடு விதிப்பது முதல் முறையல்ல. ஏற்கெனவே நான்கைந்து முறை இப்படி அறிவித்து, சில வாரங்களிலேயே நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

காரணம் சிறு பட்ஜெட் படங்கள் மோசமான தரம். வெளியான இரண்டே நாட்களில் தூக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் ஏராளம். மீதி நாட்களில் அரங்கில் காட்சிகளை ஓட்ட வேண்டியிருப்பதால், ஆங்கிலப் படங்கள் அல்லது மொழிமாற்றுப் படங்களை திரையிடும் நிலைக்கு தியேட்டர்கள் தள்ளப்படுகின்றன.

எனவே இந்த முறை இந்த கட்டுப்பாடு எத்தனை நாட்கள் நீடிக்கும் பார்க்கலாம் என்ற முணுமுணுப்பு கிளம்பியுள்ளது.


0 comments:

Post a Comment