Monday, January 16, 2012

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ளது திருமூர்த்தி அணை. வனங்களால் சூழப்பட்டு கண்ணுக்கு அழகாக காட்சி அளிக்கும் அணையில் ‘ஆபத்தும்’ இருப்பதாக சொல்லப்படுகிறது.  வனங்களுக்கு இடையே பஞ்ச லிங்க அருவி இருக்கிறது. இது ஓடையாக வழிந்தோடி அணையில் சங்கமிக்கிறது. பஞ்சலிங்க அருவியிலும், அணை கரையிலும் மக்கள் குளிப்பது வழக்கம். இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி சாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிராசையுடன் இறந்தவர்களின் ஆவிதான் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சொல்கிறார்கள்.
அணை கட்டி 53 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அருவியிலும், அணையிலும் மூழ்கி மூச்சு திணறி பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. ‘அணையில் உள்ள யானைகஜம், காளியம்மன்கோயில், பரையங்காடு பள்ளம் ஆகிய இடங்களில் குளிப்பவர்கள் அநியாயமாக பலியாகின்றனர். இங்கு நீச்சல் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள்கூட இறக்கின்றனர். இதற்கு கெட்ட ஆவிகளின் நடமாட்டம்தான் காரணம். இந்த ஆவிகள்தான் அணையில் குளிப்பவர்களின் உயிரை பலி வாங்குகின்றனÕ என்று திகிலுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
அணை கட்டுவதற்கு முன்பு, மலையில் இருந்து ஓடி வரும் நீர், பாசனத்துக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலாற்றை தடுத்து அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயிரை விட்டதாகவும், அவர்களின் ஆவிதான் நிராசையுடன் அணையை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் சிலரோ, ‘அணையில் மூழ்கி பலியாவோர் பெரும்பாலும் வெளியூர்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் தங்கள் பகுதியிலேயே திதி கொடுக்கின்றனர். இதனால் மனம் சாந்தி அடையாமல் ஆவிகள் அணையிலேயே திரிந்து  பலரை பலி வாங்குகின்றனÕ என்றும் கூறுகின்றனர். ‘குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தண்ணீருக்குள் யாரோ இழுத்தது போன்று மூழ்குகின்றனர். உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற செல்பவரும் பலியாகி விடுகிறார். சடலங்களையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதுÕ என்று சொல்லும் மக்களின் பேச்சில் பயத்துக்கு குறைவில்லை.
 அணையில் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் இதே ஆவி கதைகள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இங்கும் அடிக்கடி பலிகள் நேர்வதுதான். பரிகார பூஜைகள் செய்து ஆவிகளை சாந்தம் அடைய செய்தால் தான் இறப்புகளை தவிர்க்க முடியும் என்று சிலர் சொல்கின்றனர். அதே போல் பஞ்சலிங்க அருவியில் ஏற்படும் பலி சம்பவங்களுக்கு காரணம், அருவியில் திடீரென்று பெருக்கெடுக்கும் வெள்ளம். குளிக்கும்போது சாதாரணமாக கொட்டும் நீர், திடீரென்று பெருக்கெடுக்கும்போது அருவியில் குளிப்பவர்கள் தாங்க முடியாமல் தப்பி விடுகிறார்கள். அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கு குளிப்பவர்கள்தான் வெள்ளத்தில் தப்பிக்க வழியில்லாமல் அடித்துச்செல்லப்படுகின்றனர். அங்குள்ள ஒட்டப்பாறை, ஏழுமுக்கு, மாமரத்து கஜம் ஆகிய இடங்களில் உள்ள பொந்துகளில் சிக்கி உயிரை விடுகின்றனர்.
அணையில் குளிக்கவும், அருவிக்கு செல்லும் ஓடை வழித்தடங்களில் குளிப்பதையும் வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை கடுமையாக தடுத்து நிறுத்தினால் உயிர்ப்பலியாவது நிற்கும். அது வரை ஆவி, பலி வாங்கல் என்று கூறுவது மர்மமாக தான் இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ‘பேயும் இல்லை. பிசாசும் இல்லை. அணையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் சிக்குபவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கிறார்கள்Õ என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இருப்பினும் ஆவி பயம் மக்களை விட்டு இன்னும் அகவில்லை.
-உடுமலை எஸ்.கண்ணன்


0 comments:

Post a Comment