Monday, January 16, 2012

குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது கோட்டை கருப்பசாமி கோயில். இந்த கோயிலில் தரப்படும் பிரசாதம் திகைக்க வைக்கிறது. கிடாவின் கறிதான் ரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதோடு மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயிலுக்கு வந்தால், அவர்கள் கோர மரணத்தை சந்திப்பார்கள் என்பதும் அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கருப்பசாமி திருவிழாவின் போது நடுநிசியில் சாமி வேட்டைக்கு செல்வார். சாமி வேட்டை முடிந்து வந்ததும், வரிசையாக ஆயிரக்கணக்கில் ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுகின்றன. அப்போது ஆண்கள் மட்டுமே கோட்டை கருப்பு முன்பு இருக்க வேண்டும் என்பதை நியதியாக வைத்திருக்கிறார்கள் ஊர்மக்கள். எனவே இதில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. கோயில் எல்லைக்குள் நுழைவதும் இல்லை. மீறி வந்தால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயமாம்.
பெண்கள் மட்டும் கலந்துகொள்ளாதது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. பொதுவாக முன்னோர் வழிபாடு, ஆவி வழிபாடு போன்றவற்றில் பெண்கள் கலந்துகொள்வதில்லை. மதுரை பகுதியில் பாடையெழுப்புதல் என்ற சடங்கு சில இடங்களில் நடத்தப்படும். ஆவி இருப்பதாக நம்புபவர்கள் இந்த சடங்கு நடத்துகிறார்கள். அற்ப ஆயுசில் இறந்தவர்கள் ஆவியாக அலைவதாக கூறப்படுவது உண்டு. அது நல்லதல்ல என்ற நம்பிக்கையில் ஆவி ஓட்டும் சடங்கை செய்கின்றனர். இறந்தவரது ஆவியை எழுப்பி மரத்திலோ, புதிதாக நட்ட செடியிலோ குடியேற வைப்பார்கள். உடுக்கை அடித்து வாணவேடிக்கை முழக்கி சாமியாடி ஆடுவார். ஆவி ஓட்டும் சடங்கு துவங்கியதும், மண் கலயத்தில் தண்ணீர் ஊற்றப்படும். அருகில் விளக்கு ஒன்றை எரியவிடுவார்கள். இரவு முழுக்க அந்த விளக்கு எரியும். ஆவியாக அலைபவர் பூச்சி வடிவெடுத்து அதை நெருங்கி வருவார்களாம். விளக்கை நெருங்கி வரும் பூச்சி, தண்ணீர் கலயத்தில் விழும். விழுந்ததும் கலயத்தை மூடிவிடுவார்கள். பூச்சி வடிவில் உள்ளே விழுந்த ஆவிக்கு மாலை, மரியாதை செலுத்தி வழிபடுவார்கள். வழிபாடு முடிந்த பிறகு, கலய நீரை மரம் அல்லது செடியில் ஊற்றிவிடுவார்கள். அந்த ஆவியானது மரம் அல்லது செடியில் குடியேறிவிடும் என்பது நம்பிக்கை. ஆவி குடியேறிய மரத்தை தொடர்ந்து வழிபடுவார்கள். இதுபோன்ற வழிபாடுகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. அதுபோலவே, இங்கும் பெண் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஊர் பெரியவர்கள் சிலர்.
 கருப்பசாமி முன்பு ஆடுகளை அறுத்து முடித்தவுடன் கறித் துண்டுகள் வெட்டப்படுகிறது. ரத்தம் வழிய வழிய அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆட்டு இறைச்சியை போட்டி போட்டு வாங்கும் ஆண் பக்தர்கள் கோயிலிலேயே ஒன்றாக கறிக் குழம்பு சமைக்கிறார்கள். இந்த குழம்பையும் கோட்டை கருப்பசாமியின் பிரசாதமாக நினைத்து சாப்பிடுகிறார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கும் குழம்பை தொட்டு நாக்கில் தடவுகிறார்கள். இதன் மூலம் அவர்களை துஷ்ட சக்திகள் அண்டாது என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கறி மீதமாகி விட்டால் அதை வீட்டுக்கு எடுத்து செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். இந்த விழாவுக்காக தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கோயிலில் குவிகிறார்கள். மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயில் விழாவில் கலந்து கொண்டால், அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று கூறப்படுவது திகிலூட்டும் மற்றொரு விஷயம். இந்த சம்பிரதாயத்தை மறந்தோ, அலட்சியப்படுத்தியோ மது குடித்துவிட்டு வந்தவர்கள் கோரமாக பலியாகி இருப்பதாக ஊர்வாசிகள் பட்டியலிட்டு சொல்கிறார்கள். இதனால் கோயில் விழாவுக்கு வரும் பக்தர்கள் மதுவை மனதால்கூட நினைப்பது கிடையாதாம்.
- நாச்சிபாளையம் கே.பூபதி


0 comments:

Post a Comment