Friday, March 16, 2012

தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் - தப்பிக்கும் இந்தியா

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு நழுவும் போக்காகவே உள்ளது. இது போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக தாம் இருந்ததை மறைக்க எடுக்கப்படும் தப்பிக்கும் முயற்சியா என்பது புரியவில்லை.

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி, கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.

2 ஆண்டுகளுக்கு பின் மார்ச் 14-ந்தேதி ‘இலங்கையின் கொலைக்களங்கள் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ எனும் தனது இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது நடத்திய கொலைவெறி தாக்குதல்களும், கொடுமைகளும், பன்னாட்டு சமூகத்திற்கு கொண்டு சேர்க்க ஆதாரங்களுடன் சேனல் 4 முயற்சி மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்களை ஆணித்தரமாக முன்வைக்கும் இந்த இரண்டாவது ஆவணப்படம், கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் பன்னாட்டு மனசாட்சியில் தொலைதூர நினைவுகளாக மறக்கப்படுவார்களா அல்லது அவர்களுக்கு பன்னாட்டு சமூகம் நிலைத்த நீதி வழங்குமா எனும் வேதனையான கேள்வியுடன் முடிவு பெறுகிறது.

முன்னதாக 2010 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட போரற்ற இடங்களில் நிகழ்ந்த படுகொலைகள், உணவும் மருத்துவ வசதிகளும் இல்லாது மரணமுற்ற அப்பாவி மக்கள், பதுங்கு குழிகளில் கொல்லப்பட்ட குழந்தைகள், பின்புறம் கைகள் கட்டப்பட்டு, கண்கள் கறுப்புத்துணியால் கட்டுண்ட நிலையில், பின்னந்தலையில் குறிபார்த்துச் சுடப்பட்டு மடியும் இளைஞர்களின் உடல்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் போராளிகள் உள்ளிட்ட காட்சிகளோடு ஆவணப்படம் தொடங்குகிறது.

குறிப்பாக சேனல் 4-ன் இந்த 2-வது ஆவணப்படம் குறிப்பிட்ட போர்க்குற்ற ஆதாரங்களை பன்னாட்டு சமூகத்திற்கு முன்வைக்கிறது.

• இறுதி போர் நிகழ்ந்த காலப்பகுதியில் பள்ளி ஒன்றின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனை மீது எறிகணை தாக்குதல் நடைபெற்றதாகவும், அவை ஐ.நாவின் பாதுகாப்பு பதுங்குகுழிகளுக்கு மிக அருகில் விழுந்து வெடித்ததால் கொல்லப்பட்ட, படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்பான ஆதாரங்கள் ஐ.நா ஊழியர்களால் புகைப்படங்களாக எடுக்கப்பட்டதாகவும் ஆவணப்படம் விவரிக்கிறது.
முக்கியமாக, பொதுமக்களின் இருப்பிடங்களை இலக்காக்க் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஆதாரமாக இது கருதப்படுகிறது.

இலங்கை ராணுவம் தமிழ் மக்களைப் பட்டினி போட்டும், போதிய மருந்துகள் இல்லாமலும், மருத்துவ சிகிச்கைக்கான உபகரணங்களை வழங்காமலும் அம்மக்களைக் கூட்டமாக் கொன்றது எனவும், அதனை திட்டமிட்டு இலங்கை ராணுவம் செய்தது என்றும் ஆவணப்படம் விவரிக்கிறது.

• பாதுகாப்பு வலையத்திற்குள் மக்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் மீது இலங்கை ராணுவம் திட்டமிட்டு கனரக ஆயுதங்களையும் டாங்கிகளையும் செலுத்தி கொல்லப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட்தை சேனல் 4 தொலைக்காட்சி தெளிவாக நமக்கு விளக்குகிறது.

• இதேப்போன்று விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது ஆன பாலச்சந்திரன் கொல்லப்பட்ட சூழலையும் ஆவணப்படம் நமக்கு விளக்குகிறது.
 பாலச்சந்திரன் தவிர பிற அனைவரும் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட அனைவருமே கொல்லப்படுவதற்கு முன்பாக ஆடை களையப்பட்டிருக்கிறார்கள்.

பெண்கள் அனைவரும் முழுமையாக நிர்வாணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பின்னந்தலையில் அல்லது முன்நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிறுவனான பாலச்சந்திரன் மட்டுமே மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இப்படி, போர்க்குற்ற ஆதாரங்களை பன்னாட்டு சமூகத்தின் முன் வைத்துள்ள இந்த ஆவணப்படம் , மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, ஈழத்தமிழ் மக்களின் துயர் துடைக்க உலக சமூகம் செய்வது என்ன என்பது தான்....!

உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் போக்கிலேயே வழிநடத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதையே விரும்பினார்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்பதை நோக்கியே இலங்கை அரசு செயல்பட்டது.

இந்நிலையில், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு சேனல் 4 வெளியிட்ட ஆதாரங்களே துணைநிற்கின்றன.

இந்தக் குற்றங்கள் தண்டிக்கப்படவில்லையென்றால் ஐ.நா. மன்றம் எதற்காக என்பதே கேள்விக்குறியாகிவிடும்...!

இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை குழுவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இந்தத் தீர்மானத்தின் மீது வரும் 23-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு, உலக நாடுகள் நியாயமான முறையில் செயல்பட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் மனித உரிமைகள் காக்கும் மனசாட்சியுள்ள நாடுகள் உள்ளன என்பது உறுதியாகும்.
ஆனாலும், இந்தியாவின் இசைவு இல்லாமல் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு தீர்வு காணமுடியாது என்பதே தற்போது அசைக்கமுடியாத நிலைப்பாடாக உள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தமிழகத்தில் தீவிரமாகி வருகிறது.

இதுகுறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் புயலை கிளப்பியது. இதை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, ''எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பது இந்தியா காலம்காலமாக பின்பற்றும் கொள்கை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. அது என்றைக்கு விவாதத்துக்கு வரும் என்று தெரியவில்லை.

எனவே, அந்த தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை காலப்போக்கில் முடிவு செய்து கொள்ளலாம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் பிரதமர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். உறுப்பினர்கள் விரும்பினால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை விளக்கம் அளிக்கச் சொல்கிறேன்'' என்றார்.
 தனையடுத்து, வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், “சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மோதலை வலுப்படுத்துவதையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துவதைவிட, மீண்டும் இணக்கமான சூழலை, பொறுப்புணர்வை ஏற்படுத்தும் அடிப்படையில், முன்னோக்கி செல்லும் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். அதற்காக இந்தியா அனைத்து தரப்பினரிடமும் தொடர்பு கொண்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின், 19-வது அமர்வில், இனிதான் முறையான விவாதத்துக்கு வரவுள்ளது. அந்த வரைவு தீர்மானம் பரிசீலனைக்கு வரும் நேரம் இறுதி செய்யப்பட்ட பின்னர், நமது நிலையை முடிவு செய்வோம்.

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினர் சம உரிமை, மதிப்பு, நீதி, சுய மரியாதை பெற்று எதிர்காலத்தில் வாழத்தகுந்த விதத்தில் மத்திய அரசின் முயற்சிகள் தொடரும். அத்தகைய உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில், இந்தியாவின் நடவடிக்கையினால் ஏற்படுகிற விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய தேவை உள்ளது.

நாம் எடுக்கிற எந்த ஒரு முடிவும் அண்டை நாடான இலங்கையுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவில் விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள், இலங்கையில் நல்லிணக்கமான சூழ்நிலை ஏற்பட உதவுமா, அரசுக்கும், தமிழ்க்கட்சிகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையை வலுப்படுத்துமா என்பதையெல்லாம் ஆராய வேண்டி உள்ளது.

அண்மையில் இலங்கையில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, அந்த நாட்டு அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தை செயல்படுத்த உறுதி பூண்டிருப்பதாக அரசு தரப்பில் உறுதிமொழி தரப்பட்டது. சேனல் 4 வெளியிட்ட செய்திப்படங்களை பொறுத்தமட்டில், வெளிப்படையான விசாரணை நடத்தவேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு.” என்று கிருஷ்ணா தெரிவித்தார்.
 எஸ்.எம்.கிருஷ்ணாவின் இந்த பதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. திமுக உறுப்பினர்கள் கிருஷ்ணாவின் அறிக்கை நகலை கிழித்தெறிந்தனர்.

”ஐ.நா. மன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இலங்கை விவகாரத்தில், குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிராக முடிவு எடுப்பது பாரம்பரிய நிலை இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

அதனால் வெளியுறவு அமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்" என்று கூறிவிட்டு திமுக உறுப்பினர் கனிமொழி வெளிநடப்பு செய்தார்.

இதேப்போன்று வெளிநடப்பு செய்த இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜாவும் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து பேசும்போது, "இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள் குறித்த பிரச்சினையை அமெரிக்கா அல்லது நார்வே எழுப்புகிறவரை இந்தியா ஏன் காத்து இருந்தது? போர்க்குற்றம் தொடர்பான பிரச்சினையை எழுப்பிய முதல் நாடாக இந்தியா அல்லவா இருந்திருக்க வேண்டும்?'' என்றார்.

இறுதியில் விவாதத்துக்கு எஸ்.எம். கிருஷ்ணா பதில் அளித்தார். அப்போது அவர், "ஐ.நா. மனித உரிமை குழுவில் விவாதம் வாக்கெடுப்புக்கு வர இன்னும் 10 நாட்கள் இருக்கின்றன. அதற்குள் எவ்வளவோ விஷயங்கள் நடக்க முடியும். நாங்கள் ஆராய்வோம். இதில் இறுதி முடிவு எடுத்த பின்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்

இலங்கையில் போர் நடந்த போது ஆதரவை அள்ளிக்கொடுத்த இந்தியாவுக்கு, அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது முடிவெடுப்பதில் கால அவகாசம் தேவைப்படுவது ஏன் என்பது மனசாட்சி உள்ளவர்களின் கேள்வியாக உள்ளது.

இலங்கை., உலக நாடுகளின் வலையில் சிக்கியதால் தப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே, இந்தியா ஓடி ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்கிறதா என்பது தான் புரியவில்லை.


0 comments:

Post a Comment