Friday, March 16, 2012

சச்சின் சதசதம் வீண்; வங்கதேசம் அபார வெற்றி!

டாக்காவில் நடைபெற்ற இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சினின் 100வது சதத்தை மறக்கடிக்கும் விதமாக வங்கதேசம் மோசமான இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்து அபார வெற்றி பெற்று தங்களது இறுதி வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 138 பந்துகளில் சதம் எடுத்து சதம் எடுக்கும் தறுவாயில் சற்றே மந்தமாக விளையாட இந்தியாவுக்கு 30 ரன்கள் குறைபாடு ஏற்பட்டது. தோனி 11 பந்துகளைச் சந்தித்தார். 21 ரன்களை விளாசினார். ஆனால் அவருக்கு மட்டும் 30 பந்துகள் கிடைத்திருந்தால் மேலும் ஒரு 30 ரன்கள் கிடைத்திருக்கும், வங்கதேசம் வெற்றி கனவாகியிருக்கும்.

இலக்கைத் துரத்திய வங்கதேசம் ஆட்டத்தின் எந்த நேரத்திலும் பதட்டம் காட்டாமல் துரத்தினர். பார்மில் இல்லாத எந்த ஒரு வீரரும், அணியில் இடம்பெறுவோமா மாட்டோமா என்று உள்ள எந்த ஒரு வீரரும் இந்தியாவுடன் விளையாடினால் தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ள முடியும் என்பதற்கு தமீம் இக்பால் ஒரு உதாரணம்.

ந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி அவர் 70 ரன்களை எடுத்தார். நசிமுதீன் விக்கெட்டை துவக்கத்தில் பிரவீண் வீழ்த்தினார். அதோடு சரி, அதன் பிறகு தமீம், ஜஹ்ருல் இஸ்லாம் இணைந்து 24 ஓவர்களில் 113 முக்கிய ரன்களைச் சேர்த்தனர். ஜஹ்ருல் 53 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். 34வது ஓவரில் தமீம் இக்பால் ஆட்டமிழக்க வங்கதேச 156/3 என்று ஆனது. தேவைப்படும் ரன் விகிதம் 16 ஓவர்களில் 133 ஆகும் அதாவது 8 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலை.

ஆனால் அப்போதுதான் ஷாகிப் அல் ஹஸன் புகுந்தார். 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் அவர் 49 ரன்களை விளாசியதோடு நாசிர் ஹுசைனும் இவரும் இணைந்து 8 ஓவர்களில் 68 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஷாகிப், அஷ்வின் பந்தில் ஸ்டம்ப்டு ஆக 42 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 224/4 என்று இருந்தது. 8 ஓவர்களில் 65 ரன்கள் தேவை.

நாசிர் ஹுசைனுடன் கேப்டன் முஷ்பிகுர் இணைந்தார். 46 ஆவது ஓவர் முடிவில் வங்கதேசம் 253/4 என்று இருந்தது. 24 பந்துகளில் 37 ரன்கள் தேவை.

பிரவீண் குமார் வந்தார். 47வது ஓவரில் 4 ரன்களையே அவர் விட்டுக் கொடுக்க வங்கதேசம் 257/4 என்ற நிலையில் கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு வந்தது.

ஆனால் அதற்கு அடுத்த ஓவரில் இர்பான் பத்தான் படு மோசமாக வீச அதாவது 120 கிமீ வேகத்திற்கு மேல் ஒரு பந்தும் இல்லை, யார்க்கர்கள் இல்லை, ஓவர் பிட்ச் அல்லது புல்டாஸ் என்று வீசி 2 சிக்சர்களை முஷ்பிகுர் அடிக்க அந்த ஓவரில் 17 ரன்களை கொடுத்தார்.

அதற்கு அடுத்த 49வது ஓவரை பிரவீண் வீசினார். மீண்டும் நோபாலில் முஷ்பிகுர் பவுண்டரியையும் அதற்கு அடுத்த பந்து அபாரமான சிக்சரையும் அடித்து அந்த ஓவரில் 14 ரன்களை விட்டுக் கொடுக்க. கடைசி ஓவரில் 2 ரன்கள் என்ற நிலை இருந்தது.

டிண்டா வீச அதனை பவுண்டரிக்கு விரட்டினார் மஹ்முதுல்லா இந்தியாவுக்கு வெட்கக் கேடான தோல்வி ஏற்பட்டது. சச்சின் சத சதம் நினைவிலிருந்து அகற்றப்படவேண்டிய இந்தியத் தோல்வியாகப் போய் முடிந்தது.

அஷோக் டிண்டாவை அணியில் எடுத்து விட்டு அவருக்கு 5 ஓவர்கள் மட்டுமே கொடுக்கவேண்டிய நிர்பந்தம் என்னவென்று புரியவில்லை. இன்றைக்கு அஷ்வின் பந்து வீச்சு எடுபடாமல் போனதும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. ரைனா 7 ஓவர்களில் 30 ரன்கள் என்று இருக்கும் போது ரோஹித் ஷர்மாவுக்கு 2 ஓவர்களை கொடுக்கவேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. 7 ஓவர்கள் வீசியவர் விக்கெட் எடுப்பாரா அல்லது புதிய வீச்சாளர் விக்கெட் எடுப்பாரா? கடைசியில் பத்தானுக்குப் பதிலாக டிண்டாவுக்கு கொடுத்துப் பார்த்திருக்கலாம் இன்று அவரது தினமாக இருந்திருந்தால்? ஆனால் தோனி ஒரு பயந்தாங்கொள்ளி கேப்டன் என்றே புரிகிறது.
 


0 comments:

Post a Comment