Saturday, December 24, 2011

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்

அன்புத் தந்தையாம் இறைவன் இந்த மண்ணகத்தை அன்பு செய்ததின் அடையாளமாக நம் திருமகன் இயேசுவை நமக்குப் பரிசாகக் கொடுத்ததை இந்நன்னாளில் நினைவு கூர்ந்து யாவருடனும் இயேசுவின் பிறப்பால் விளைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.இயேசுவின் பிறப்பைப் பற்றி கபிரியேல் தூதர் மரியாவுக்கு அறிவிக்கின்றார். வானதூதர் மரியாவின் முன் தோன்றி, ‘‘அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’’ என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ‘‘மரியா, அஞ்சவேண்டாம். கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் நீர்! நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார்; அவருடைய தந்தையாம் தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது’’ என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், ‘‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’’ என்றார். வானதூதர் அவரிடம், ‘‘தூய ஆவி உம்மீது வரும். உன்னதக் கடவுளின் வல்லமை உம் மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனை கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’’ என்றார். பின்னர் மரியா, ‘‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’’ என்றார். அப்போது வானதூதர் அவரை விட்டு அகன்றார். (லூக்கா 1: 26&38)அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கெடுக்குமாறு கட்டளை பிறப்பித்தார். தம் பெயரை பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழி மரபினரான யோசேப்பும் தன் மண ஒப்பந்தமான மரியாவோடு பெயரைப் பதிவு செய்ய கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கே இருந்த பொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணியில் பொதிந்து மாட்டுத் தொழுவத்திலுள்ள தீவனத் தொட்டியில் கிடத்தினர்.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு குழந்தைக்கு ‘இயேசு’ என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர். இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தார்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப் போவதில்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோயிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்ப செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்க பெற்றோர் குழந்தையை உள்ளே கொண்டு வந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி, ‘‘ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன. இம்மீட்பே பிற இனத்தார்க்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரவேலருக்குப் பெருமை’’ என்றார்.

குழந்தையைப் பற்றி சிமியோன் கூறியது குறித்து தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி மரியாவை நோக்கி, ‘‘இதோ, இக்குழந்தை இஸ்ரவேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்’’ என்றார்.ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்த பின் கைம்பெண் ஆனவர். அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோயிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லோரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு யோசேப்பும் மரியாவும் குழந்தையுடன் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள் என்று லூக்காவின் இறையருள் கருத்து இவ்வாறு வெளிப்படுகிறது:
‘‘இயேசு தன் பணியை ஆரம்பிக்கையில் தூய ஆவியின் வல்லமையோடு அடியெடுத்து வைக்கின்றார். மெசியா தாவீதின் மகனாய், மனிதவழி மரபினராய் இல்லாமல் இறைவனின் வழி மரபாய் இருப்பார். மெசியா மனித வல்லமையை நம்பியிருக்காமல், தூய ஆவியின் வல்லமை கொண்டவராய் திகழ்வார்.’’

இயேசு கொண்டு வரும் அரசு, உலகில் நாம் காணும் அரசு போன்றது அல்ல. அது ஆன்மிக அரசு. இயேசுவை யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அவரே அரசர். அந்த அரசாட்சி அவர்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றென்றும் நிலைத்திருக்கும். அந்த ஆட்சிக்கு தூய ஆவியின் துணை இருக்கும். அந்த ஆட்சியின் உறுப்பினர்களாக மாற ரத்த உறவுகள் அவசியமில்லை. இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் ஒன்றே அந்த அரசிற்குள் நுழையத் தகுதியாகும்.&மணவைப்பிரியன் ஜெயதாஸ் பெர்னாண்டோ


0 comments:

Post a Comment